செங்கல்பட்டு மாவட்டம் வாயலூரில் ஆசிட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிட் ஏற்றி வந்த லாரி விபத்து

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி டேங்கர் லாரி ஒன்று ஆசிட் ஏற்றிக் கொண்டு வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரி இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அதி வேகத்தில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை தாறுமாறாக ஓடியது. அப்போது சைக்கிளில் இருவர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, லாரி எதிர்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியதுடன் தடுப்பு சுவற்றில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வாயலூர் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

2 பேர் பலி

லாரி கவிழ்ந்ததில் டேங்கரிலிருந்து ஆசிட் கசிந்தது. மேலும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையில் ஆறாக ஓடிய ஆசிட்

லாரியிர் இருந்து வெளியேறிவரும் ஆசிட்டை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் இருந்து ரசாயனம் வெளியேறி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.