பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில்.. புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய குற்றத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பார் நாகராஜ் என்ற நாகராஜ், அதிமுக.,வில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். 
 
கல்லூரி மாணவிகளை குறி வைத்து காதல் வலையில் விழ வைத்து, பொள்ளாச்சி அருகே உள்ள பண்ணை வீட்டில் பல பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ள கும்பலை போலீசார் கைது செய்து இருந்தாலும், இந்த விவகாரத்தில் அரசியலில் உள்ள பெரிய புள்ளிகள் தொடர்பு உள்ளதால் விஷ்வரூபம் எடுத்து உள்ளது 

தொடக்கத்தில் இது தொடர்பாக, சபரி, வசந்த குமார், சதீஷ் குமார் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் குழுவின் தலைவனான திருநாவுக்கரசு சில நாட்களுக்கு பிறகு பிடிபட்டான். இவர்களிடம் விசாரணைக்கு நடைபெற்று வரும் சமயத்திலேயே, இந்த வீடியோ தொடர்பாக முதலில் புகார் அளித்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளனர். 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய புள்ளி பார் நாகராஜ், பாபு, செந்தில் குமார், வசந்த குமார் ஆகியோர். பார் நாகராஜ் அதிமுகவில் ஜெயலலிதா பேரவை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை கைது செய்து தற்போது வெளியில் விட்டு உள்ளனர். இதற்கிடையில், அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை 
வெளியிட்டு உள்ளது.

அதில், "கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகவும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கோவை புறநகர் மாவட்டம் பொள்ளாச்சி நகரத்தைச் சேர்ந்த திரு ஏ. நாகராஜ் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என அதிமுக தலைமை கழகம் அறிவித்து உள்ளது.