6 கிலோ தக்காளி 100 ரூபாய்.! சரசரவென குறைந்த விலை- சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்
சமையலுக்கு மிக முக்கியமான தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை சமீபத்தில் சரிந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் தக்காளி 6 கிலோ 100 ரூபாய்க்கும், வெங்காயம் கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமையலும் காய்கறியும்
காய்கறிகள் இல்லாமல் சமையல் செய்ய முடியாது அதிலும் தக்காளி மற்றும் வெங்காயம் இல்லையென்றால் சமையல் ருசியை கொடுக்காது. ஏனென்றால் இந்த இரண்டும் தான் சமையலுக்கு மிக முக்கியமாகும். மற்ற காய்களின் விலை அதிகரித்தால் இல்லத்தரசிகள் பெரிய அளவில் கண்டுகொள்ள மாட்டார்கள். அதுவே தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்தால் அவ்வளவு தான் மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் துண்டு விழும். அந்த வகையில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு உயர்ந்தது.
தக்காளி வெங்காயம் விலை
தக்காளி விலை 100 ரூபாயை தொட்டால் வெங்காயம் விலை 80 ரூபாயை எட்டும், வெங்காயம் 110 ரூபாயை தொட்டால் தக்காளி விலை 90 ரூபாய்க்கு விற்பனையாகும். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலையானது சரசரவென சரிந்துள்ளது. அதன் படி 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் 6 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன் படி தக்காளியின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நல்ல தரமான தக்காளி ஒரு கிலோ 20 முதல் 23 ரூபாய்க்கும், சிறிய அளவிலான தக்காளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
குறைந்தது தக்காளி விலை
இதே போல வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஒரு கிலோ 100 ரூபாய் வரை என்ற உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலையானது குறைந்து வருகிறது. காரிப் பயிர் வரத்தின் காரணமாக புதிய வெங்காயம் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 50 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 4 கிலோ 5 கிலோ என்ற அளவில் தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
காய்கறி விலை என்ன.?
சென்னை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைகிழங்கு ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்த காய்கறி விலை
சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று 15 முதல் 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காய் ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.