கொள்ளை அடிக்க கோவையில் சுற்றித்திரிந்த மர்மகும்பல்.. ஆயுதங்களோடு மடக்கி பிடித்த போலீஸ்- வெளியான முக்கிய தகவல்
கோவையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்க திட்டம்
தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவருவதையடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், போலீசார் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கோவை என்.எஸ்.கே. தெரு அருகே காலி மைதானத்தில் ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த கும்பலை பார்த்ததும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த வாகனத்தை நிறுத்தினர். இதனை கண்ட அந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்து தப்பிக்க முயன்றனர்.
சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்
விரைவாக செயல்பட்ட போலீசார் தப்பி ஓட முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் செல்வபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் காத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவை செல்வபுரம் கல்லாமேட்டை சேர்ந்த அப்பாஸ் (24), பிரகதீஷ் (24), முபில் (24), செட்டிவீதியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (28), செல்வபுரம் நஞ்சப்பா கார்டனை சேர்ந்த சன்பர் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 கத்தி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண் கொலை தொடர்பாக பொய்யான தகவல்.!! அண்ணாமலை மீது வழக்குப்பதிவு.. அதிரடியாக வீடியோ வெளியிட்டு பதிலடி