எரிவாயு கன்டெய்னர் லாரி மீது சரக்கு லாரி மோதி பயங்கர விபத்து..! அலறி அடித்து ஓடிய மக்கள்
இயற்கை எரிவாயுவை ஏற்றிக்கொண்டு சென்ற கன்டெய்னர் லாரி மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் லாரியில் இருந்து எரிவாயு வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இயற்கை எரிவாயு ஏற்றுக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோவை போடிபாளையம் அருகே லாரி வந்த போது, எதிரே வேகமாக வேறொரு வாகனத்தை முந்தி வந்த கார் ஒன்று டேங்கர் லாரியை நோக்கி வந்தது. அப்போது கார் மீது மோதாமல் இருக்க டேங்கர் லாரி ஓட்டுநர் ராஜேஷ்குமார் வலது புறமாக திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓர பள்ளத்தில் இறங்கியது.
எரிவாயு லாரி மீது மோதிய சரக்கு லாரி
அதே வேளையில் டேங்கர் லாரியின் பின்னால் வந்த மற்றொரு லாரி எதிர்பாராத விதமாக டேங்கர் லாரியின் பின்பக்கமாக மீது மோதி நின்றது. இதில் டேங்கர் லாரியின் வால்வு உடைபட்டு அதிலிருந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்த ஓட்டுநர்கள் அங்கிருந்து உடனடியாக சற்று தொலைவிற்கு சென்றனர். அதிர்ஷடவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுக்கரை காவநிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லைன் வாகனம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.டேங்கர் லாரியில் முழு கொள்ளளவில் எரிவாயு நிரப்பப்படாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
இருசக்கர வாகனத்தில் லாரி மோதி விபத்து; தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி