எடப்பாடியில் பள்ளிப் பேருந்தில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு மாணவன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வெள்ளாண்டி வலசு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் கணபதியின் மகன் சரவணன் (14). அதே பகுதியை சேர்ந்தவர் அழகரசன் மகன் கந்தகுரு (14). இருவரும் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல பள்ளி முடிந்து பள்ளி வேனுக்கு வந்துள்ளனர். அப்போது பேருந்தில் இடம் பிடிப்பதில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு சரவணன் கந்த குருவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து கந்தகுரு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். 

இதையும் படிங்க: அடேங்கப்பா! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த இடங்களில் மின்தடை? வெளியானது லிஸ்ட்!

இதனை கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பள்ளி மாணவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவனின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்பிற்கு உள்ளான மாணவனின் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 

பின்னர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாணவன் சரவணனை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களா நீங்கள்! தேர்வுத் துறை வெளியிட்ட ரொம்ப முக்கிய செய்தி!

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியின் நுழைவாயிலில் கூடுதலான எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பாக இரு மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.