55 ஆண்டு நட்பு.. மனிதர்களை போலவே நட்பை பகிர்ந்து கொள்ளும் பாமா, காமாட்சி யானைகள்..
முதுமலை யானைகள் முகாமில் இருக்கும் இரண்டு யானைகளின் 55 ஆண்டு நட்பு நெகிழ்ச்சியான கதையை ஐஏஎஸ் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முதுமலை யானைகள் முகாமில் இருக்கும் இரண்டு யானைகளின் 55 ஆண்டு நட்பு நெகிழ்ச்சியான கதையை ஐஏஎஸ் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக சிறந்த தோழிகளாக இருக்கும் பாமா மற்றும் காமாட்சி என்ற இரண்டு யானைகளின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அவரின் பதிவில் “மனிதர்களைப் போலவே யானைகளும் அன்பான நட்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. தமிழ்நாட்டின் முதுமலை தெப்பக்காடு என்ற இடத்தில் உள்ள எங்கள் யானைகள் முகாமில் கடந்த 55 ஆண்டுகளாக சிறந்த நண்பர்களாக இருக்கும் பாமா (75) மற்றும் காமாட்சி (65) ஆகிய இரு அழகான யானைகளுக்கு இடையேயான நட்பின் உண்மைக் கதை இது” என்று பதிவிட்டுள்ளார்.
பாமா மற்றும் காமாட்சி என்ற இரு யானைகளும், உண்மையிலேயே தைரியமானவை, விசுவாசமானவை.. பாசமுள்ளவை என்றும் அவரும் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை, கோபன் என்ற யானைப்பாகன் பாமாவை காட்டு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது சிறுத்தையால் தாக்கப்பட்டார். ஆனால் பாமா யானையை தனது தும்பிக்கையால் சிறுத்தையை விரட்டி, தனது யானைப் பாகனின் உயிரை காப்பாற்றியது.
யானை முகாமில் உணவருந்தும்போது கூட பாமாவும் காமாட்சியும் ஒன்றாக தான் இருக்கும். இரு யானைகளுக்கும் கரும்பு பிடிக்கும். ஆனால், ஒரு யானைக்கு மட்டும் கரும்பு கொடுக்க கூடாது. எப்போதுமே இரண்டு யானைகளுக்கும் கரும்புகள் கொடுக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.
ஆசியாவிலேயே மிகவும் பழமையான முகாமில் இரண்டு குட்டிகள் உட்பட 27 யானைகளுடன் இந்த இரண்டு யானைகளை நன்றாகப் பராமரித்ததற்காக முகாம் நிர்வாகத்திற்கும் பாராட்டுகள். அறிவியல் மேலாண்மை நடைமுறைகள் தவிர, உணர்திறன் மற்றும் பச்சாதாபம் கொண்ட இந்த யானைகளுக்கு தமிழ்நாடு வனத்துறை சிறந்த முறையில் கவனம் செலுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த பலரும் யானை பாதுகாவலர்களுக்கும், தமிழக வனத்துறையினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைதள பக்கத்தில் 261.6k பின்தொடர்பவர்களைக் கொண்ட சுப்ரியா சாஹு, அவ்வப்போது இதுபோன்ற அழகான வனவிலங்குக் கதைகளைப் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..