முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனின் ஆதராவளர்கள் 40 பேரை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அதிமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன் அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும். பொதுச்செயலாளர் இந்த பணிகளை மேற்கொள்ளாவிட்டால் நானே ஒருங்கிணைப்பு பணியை செய்வேன் என்று கூறி அதிரடி கிளப்பினார்.
இதனை தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிபடுத்த வேண்டிய கருத்தை பொது வெளியில் வெளிபடுத்தியதாக கூறி செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பதவிகளில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும் செங்கோட்டையனுக்கு பதிலாக முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு அதிமுகவில் இருந்து நீக்கபட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து அதிமுகவினர் நாள் தோறும் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் இல்லத்திற்கு நேரில் வந்து தங்களது ஆதரவை தெரவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட கோபிசெட்டிபாளையத்தை சுற்றியுள்ள அந்தியூர், அத்தாணி, வாணிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
