மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டிருந்த 4 வயது மாணவி, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பள்ளியில் கோடை சிறப்பு வகுப்பு

வெயிலின் தாக்கம் நாள் தோறும் அதிகரித்து வந்த நிலையில், பள்ளியில் ஆண்டு இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்கும் செல்ல தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் கோடை விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பயிற்சி வகுப்பானது நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களும் கட்டணம் செலுத்தி பயின்று வருகிறார்கள். அந்த வகையில் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டிருந்த 4வயது பள்ளி மாணவி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் 2024ம் ஆண்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு!

மதுரையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு

மதுரையில் கேகே நகரில் ஸ்ரீ இளம் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் உத்தங்குடியைச் சேர்ந்த அமுதன் என்பவரின் 4 வயது மகள் ஆருத்ரா ஸ்பீச் தெரபி பயிற்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆருத்ராவுடன் மேலும் குறிப்பிட்ட 10 குழந்தைகளுக்கும் பங்கேற்றுள்ளது. இன்று எப்போதும் போல் ஆருத்ரா வகுப்பிற்கு சென்றுள்ளார். ஓய்வு நேரத்தின் போது மற்ற சிறுமிகளோடு இணைந்து ஆருத்ரா விளையாடியுள்ளார். 

தண்ணீர் தொட்டியில் மூழ்கிய சிறுமி

அப்போது பள்ளி வளாகத்தில் சரியாக மூடாமல் இருந்த 12 அடி ஆழம் தண்ணீர் இருந்த தொட்டியில் ஆருத்ரா தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்து பதறிய ஆசிரியர்கள் சிறுமியை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் சிறுமி மூழ்கியுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து தண்ணீர் தொட்டியில் மூழ்கிக் கிடந்த குழந்தையை தீயணைப்பு துறையினர் வந்து மீட்டுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கனவே உயிரிழ்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தாளாளர், ஆசிரியர்கள் கைது

காவல்துறையின் விசாரணையில் ஆசிரியர்களின் கவனக்குறைவாலேயே சிறுமி ஆருத்ரா இறந்துள்ளதால் பள்ளி தாளாளர் திவ்யா உள்பட ஐந்து ஆசிரியர்கள் விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.