கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாயினர். அருகிலுள்ள கட்டுமானப் பணியின் போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டது.
சென்னையில் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மருத்துவமனையின் 7 மாடி கட்டடத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை ஏற்பட்டதால் நோயாளிகள் அவதிஅடைந்தனர். மாலை 5 மணியளவில் ஏற்பட்ட மின் தடையால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து 23 நோயாளிகள் மற்றொரு பகுதியில் உள்ள வார்டுக்கு மாற்றப்பட்டனர். மேலும் மின்சாரம் தடை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில்,
மருத்துவமனை அருகே கட்டுமான பணியின்போது மின்சார வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாக தெரிவித்தனர். தற்போது மின்தடை பிரச்சனை சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த நிலையில் மின்தடை ஏற்பட்ட கீழ்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மின்தடைக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தவர், உடனடியாக மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்
இந்த நிலையில் மின்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் இணைப்பை வழங்க ஜெனரேட்டர்கள் வேறு இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கட்டிட பணியினால் அறுந்த மின் வயர்கள் சரிசெய்யப்பட்டு மின்தடை சீரமைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இயல்புநிலை திரும்பி உள்ளது.
