ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்... 3 நாட்கள் போலீஸ் காவல்- நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்திற்கு 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் கடந்த 25 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலத்த பாதுகாப்பு நிறைந்த ராஜ்பவன் முதலாம் எண் நுழைவு வாயில் பகுதிக்கு முன்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மற்ற இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்படாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கினர்.
ஆளுநர் மாளிகை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என பதிவிடப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதனை மறுத்த காவல்துறை வீடியோ வெளியிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், தேனாம்பேட்டையில் இருந்து கருக்கா வினோத் தனியாகவே நடந்தே வந்திருக்கிறார். முதல் பெட்ரோல் குண்டை வீசிய பின்னர் இரண்டாவது பெட்ரோல் குண்டை பற்ற வைக்கும் போது காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டுமே வந்ததாகவும், ஆளுநர் மாளிகைக்குள் அந்த நபர் செல்ல முயலவில்லையெனவும் கூறப்பட்டது. இந்தநிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.
3 நாட்கள் போலீஸ் காவல்
இந்தநிலையில் கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதனையடுத்து 3 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் ஒன்பதாவது அமர்வு நீதிபதி மோகனாம்பாள் முன்பு கருக்கா வினோத் இன்று ஆஜர் படுத்திய நிலையில் போலீசார் வைத்த கோரிக்கையை ஏற்று மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கருக்கா வினோத் ராஜபவன் மீது பெட்ரோல் குண்டு வீசியது ஏன்.? அவருக்கு உடந்தையாக இருந்து யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்
ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது பாஜக வழக்கறிஞரா.? உண்மை என்ன.?