பழனி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இரு நண்பர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

தொடரும் சாலை விபத்துகள்

நாள் தோறும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் கட்டுப்பாட்டை இழந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் ஒரே வருடத்தில் நாடு முழுவதும் பல லட்சம் பேர் உயிரை வாகனங்கள் காவு வாங்கி வருகிறது. அந்த வகையில் பழனி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் நண்பர்கள் 2 பேர் துடிதுடித்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டியை சேர்ந்த சசி மகன் சங்கர் (வயது 31). அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (31). நண்பர்களான 2 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நரிக்கல்பட்டியில் இருந்து வேலை நிமித்தமாக பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சினிமாவை மிஞ்சிய விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி! நடந்தது என்ன?

பைக் மீது மோதிய கார்

அப்போது பழனி-தாராபுரம் சாலையில் மானூர் அருகில் சென்று கொண்டிருந்த போது கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, தங்களது வாகனத்திற்கு முன்பாக சென்ற லாரியை முந்த முற்பட்டது. அப்போது அந்த கார் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்த மகேஷ் மற்றும் சங்கர் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் அடைந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடியவர்கள் அடுத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Family Budget Cars: இந்த காரை நம்பி பேமிலியோட போகலாம்.. பாதுகாப்பான கார்கள் பட்டியல் இதோ..

போலீசார் விசாரணை

சாலை விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி அருகே. சாலை விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நரிக்கல்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.