அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் 
தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு 
வாய்ப்புள்ளது. பொதுவாக செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பொழியாது. ஆனால், 12 - 2013, செப்டம்பர் 6 - 2011, செப்டம்பர் 27 - 2007 
ஆகிய காலங்களில் அதிக மழையும் பொழிந்துள்ளது என்று தற்போது என் நினைவுக்கு வருகிறது.

அஸ்ஸாம், சிக்கிம், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் இன்னும் பருவமழை நிறைவடையவில்லை. இந்த நேரத்தில் 
தமிழகத்தில் பல இடங்களிலும் பருவ மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் 
மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

மழைக்கு முக்கிய காரணமாக இருப்பது வெப்பம்தான். வெப்பத்தை பொறுத்தே மழை அமையும். முதலில் தமிழகத்தின் உள் பகுதிகளில் 
பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை தொடங்கும் இரவு நேரம் நெருங்கும்போது காற்றின் சுழற்சியால் கடற்கரை பகுதியை 
நோக்கி நகரும். இருப்பினும் உள் மாவட்டங்களில்தான் அதிக மழை பொழியும். 

கடந்த வருடம் முதல் இதுவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சரியான மழை இல்லை. 
ஆனால் இந்த 15 நாள்கள் இம்மாவட்டங்கள் நல்ல மழையைப்பெறும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை போன்ற 
மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 

முன்கூறியதுபோல் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னையில் மழை பொழியும். அடுத்த 15 நாள்கள் தமிழகத்தில் பெய்ய உள்ள 
மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முன்னதாக எந்த மாவட்டங்களில் மழை இல்லாமல் இருந்ததோ அந்த மாவட்டங்களில் அடுத்த 
15 நாள்களில் மழை பொழியும். 10, 11, 12 ஆகிய நாள்களில் நல்ல இடியுடன் கூடிய மழை பொழியும். வெள்ளத்துக்கான வாய்ப்பு 
இல்லை. ஆனால் பல இடங்களில் கனமழை பொழியும். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.