தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,71,239 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்று 93.80% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 36 ஆயிரத்து 120 மாணவர்களும், 4 லட்சத்து 36 ஆயிரத்து 119 மாணவிகளும் என 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 பேர் எழுதினர். இவர்கள் 4,113 தேர்வு மையங்கள் தேர்வை எழுதினர்.
11ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் மதியம் 2 மணிக்கு
ஏற்கனவே 11 வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் முன்னதாகவே இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 10ம் வகுப்பு மதிப்பெண் விவரம் வெளியான நிலையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் வெளியிட்டாலும், 11ம் வகுப்பு மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் மதியம் 2 மணிக்குத்தான் இணையத்தில் பார்க்க முடியும்.
10ம் வகுப்பு தேர்வில் 93.80 சதவீதம் தேர்ச்சி
மொத்தம் 8,71, 239 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 93.80 சதவீதமாகும். 10ம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள் 15,652 பேர் ஆகும். தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 4,917 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 1,867 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
டாப் 5 மாவட்டங்கள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதத்துடன் சிவகங்கை முதலிடத்திலும், 95.57 சதவீதத்துடன் விருதுநகர் 2வது இடத்திலும், 95.47 சதவீதத்துடன் கன்னியாகுமரி 3வது இடத்திலும், 95.42 சதவீதத்துடன் திருச்சி 4வது இடத்திலும், 95.40 சதவீதத்துடன் தூத்துக்குடி 5வது இடத்திலும் உள்ளது.
