வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்வு..! பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த சென்னை மாநகராட்சி
சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்களுக்கு அனுமதி கட்டணம் 100% அதிகரித்து சென்னை மாநராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வீடு கட்ட அனுமதி கட்டணம்
தமிழக அரசு பல்வேறு கட்டண உயர்வை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கியமாக கட்டிடங்கள் கட்ட அனுமதி கட்டணத்தை அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் படி, வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகம், தொழிற்சாலைகளின் 1,076 அடி மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90, 41-முதல் 100 சதுர மீட்டர் வரையும், 10 சதுர மீட்டருக்கு ரூ.155, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு 410ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.
எவ்வளவு உயர்வு.? அப்போது அமல்.?
மேலும் 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு 1050 என இருந்தது. இந்த தொகையானது, தற்போது ரூ.180, ரூ.310, ரூ.820, ரூ.2,100 என இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றுக்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணமும் இரு மடங்காக உயர்த்தப்பட் டுள்ளது. அதே நேரத்தில் 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டினால் ஏற்கெனவே, முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.90 கட்டணமும், 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தகட்டணமானது ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த்தப்படவில்லை. இதேபோல் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப் பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தின் படி, இந்த புதிய கட்டண உயர்வு வரும் 10-ம் தேதி முதல் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. இந்த மாதம் தீபாவளிக்கு முன்னதாக கிடைக்குமா? வெளியான முக்கிய தகவல்.!