1 கிலோ தக்காளி ரூ.60 மட்டுமே.. ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது..
சென்னையில் முதல்கட்டமாக இன்று 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.100- விற்பனையாகிறது. ஒரு சில இடங்களில் ரூ.120 – ரூ. 160 வரை கூட க்கு கூட தக்காளி விற்கப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 1000 டன் வரை தக்காளி வரும் என்றும், ஆனால் தற்போது தக்காளி வரத்து 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளதால் தான் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரத்து குறைவு, கோடை மழை உள்ளிட்ட காரணங்கள் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று தலைமை செயலத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் முதல்கட்டமாக இன்று 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. வட சென்னையில் 25, மத்திய சென்னை 22, தென் சென்னை 35 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி, ரூ110-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கடைக்கு 50 கிலோ தக்காளி மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கே தக்காளி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஒரு சில ரேஷன் கடைகளுக்கு இன்னும் தக்காளி விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.