சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
Explosion At A Firecracker Factory Near Sivakasi: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் 90% பட்டாசுகள் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பட்டாசு தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஆனால் இங்குள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த விபத்துகள் மூலம் அப்பாவி தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி அருகே ஆண்டியார்புரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
கண்மூடி திறப்பதற்குள் நடந்த விபத்து
இந்த பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. கண்மூடி திறப்பதற்குள் அங்கு இருந்த அனைத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் 2 பெண்கள் உள்பட 4 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியானார்கள். சம்பவம் நடந்ததும் காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சமூகவலைத்தளத்தில் வைரல்
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடி விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பட்டாசு ஆலை தீப்பிடித்து கரும்புகை வெளியான காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை
வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கண்டு தொழிலாளர்களின் உயிர்களை அரசு பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
