விருதுநகர் மாவட்டம் திருவிருந்தாள்புரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களையும் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார். கொலையை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு. விவசாயி. இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
குடும்ப பிரச்சினை
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுந்தரவேலு ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் துடிதுடிக்க வெட்டி கொலை செய்துவிட்டு அரிவாளாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது தனது மனைவியையும் மகள்களையும் கொலை செய்தவிட்டதாக கூறியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
3 பேரின் உடல்களை மீட்ட போலீஸ்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரை ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்த சுந்தரவேலு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை
மேலும் கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக தாலி கட்டிய மனைவி மற்றும் பெற்ற மகளை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
