விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேன்சி ரக பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான யுவராஜ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தனர்.
3 பேர் பலி
அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் சிக்கிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்ளுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்த மூன்று பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
இதில், சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்கள் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வெடி விபத்து தொடர்பாக இருவர் கைது
3 பேரை பலி கொண்ட பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக போர்மேன் மற்றும் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் ராஜா சந்திரசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.
