விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் விபத்து சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை காளையார்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கொண்டிருந்தனர். அப்போது பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு காரணமாக விபத்து நேரிட்டது. இதில் 2 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் பலி

உடனே இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மாரியம்மாள் (51),கலைச்செல்வி (33), திருவாய்மொழி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்தனர். மேலும், ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், மேலாளர் ராஜேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கையோடு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: பட்டாசு வெடி விபத்தில் உடல் சிதறி உயிரிழந்த 4 பேர்! கலங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரணம் அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நெடுங்குளம் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை சுமார் 10.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் எம் புதுப்பட்டி, சொக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியம்மாள் (51) க/பெ.மாரிமுத்து, எஸ் கொடிக்குளம், கூமாப்பட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி (48) க/பெ.ராமர் மற்றும் எம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35) க/பெ.விஜயகுமார் ஆகிய மூன்று நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாக்கியலட்சுமி (55) க/பெ.துரைராஜ், கோமதி (55), திருமதி.பாத்திமுத்து ( 55) க/பெ.அப்துல் காதர், ராபியா பீவி ( 50) க/பெ.தீன்முகம்மது, ராமசுப்பு (வயது 43) க/பெ.அன்புசெல்வன், லட்சுமி (40) க/பெ.தங்கப்பாண்டியன், முனியம்மாள் ( 40), க/பெ.ஆறுமுகம் ஆகியோருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

நிவாரணம் அறிவித்த முதல்வர்

இவ்விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.