சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! 6 பேர் உடல் சிதறி பலி! ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். 

Sattur firecracker factory explosion! 6 people died tvk

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது பட்டாசுத் தொழில். இங்கு அவ்வப்போது வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. முறையான உரிமம் இல்லாது வாடகை வீடுகளில் பட்டாசுகளை தயாரிப்பதை அனுமதிப்பது, பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தாது, சட்டத்திற்கு புறம்பான வெடிபொருட்கள் பயன்படுத்துவதை கண்டுகொள்ளாதது என்பது போன்ற அனைத்து விதிமீறல்களையும் லஞ்சம் பெற்று கொண்டு அல்லது அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளும், சட்டவிரோதமாக தொழில் நடத்துபவர்களுமே இந்த விபத்துகளுக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 

இதையும் படிங்க: எதற்கும் ஒத்துழைப்பு கொடுக்காத அன்புமணி? குரு இடத்தை பிடிக்கிறார் முகுந்தன்? சொல்வது யார் தெரியுமா?

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள அப்பைநாயக்கன்பட்டி பகுதியில்  சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் உள்ள 35 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்  4 அறைகள் அடுத்தடுத்து இடிந்து தரை மட்டமாகின. அந்த அறைகளில் இருந்த வேல்முருகன், நாகராஜ், கண்ணன், சிவக்குமார், காமராஜ், மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்பு படையினர் தேடி வருகின்றனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: தமிழக அரசு அறிவித்த பொங்கல் போனஸ்! அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!

இதற்கிடையில்,  பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பட்டாசு ஆலை  விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். 


இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சிவகுமார் (56) த/பெ. சிவசுப்பிரமணியன், குருந்தமடத்தைச் சேர்ந்த வேல்முருகன் (54) த/பெ. கோபால் மற்றும் காமராஜ் (54) த/பெ. சுப்பு, வீரார்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (54) த/பெ. ராமசாமி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் (46) த/பெ.சக்திவேல், செட்டிக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் (37) த/பெ. ராஜாமணி ஆகிய 6 நபர்கள்
உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த முகமது சுதீன் என்பவருக்கு
சிறப்பு சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios