Child Kidnapping: குடியாத்தத்தில், மென்பொருள் பொறியாளர் ஒருவரின் 4 வயது மகன் பட்டப்பகலில் கடத்தப்பட்டார். தந்தை கண்முன்னே மிளகாய் பொடி தூவி, மர்ம நபர்கள் குழந்தையை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் உள்ள பவள தெருவில் சாப்ட்வேர் இன்ஜினியர் தொழில் செய்யும் வேணு. இவரது மகன் யோகேஷ்(4). மகனை உணவு இடைவேளைக்காக பள்ளியில் இருந்து அழைத்து வந்து வீட்டு வாசலில் நின்ற நேரத்தில் மர்ம நபர்கள் மிளகாய் பொடி கண்ணில் தூவியும் மிளகாய் பொடியை வாரி முகத்தில் அடித்தும் தனது குழந்தையை கண் எதிரே காரில் கடத்தியுள்ளனர்.

கர்நாடக மாநில பதிவின் கொண்ட வெள்ளை நிற சொகுசு காரின் கடத்தியதை கண்ட தந்தை வேணு பதறி கூச்சலிட்ட நிலையில் மின்னல் வேகத்தில் கார் சென்றுள்ளது. இதனால் மிகுந்த பதற்றத்துடன் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். விரைவாக செயல்பட்ட குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து உஷார்படுத்தியதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை தற்போது குடியாத்தம் நகர போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டு நான்கு திசையிலும் காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு கார் சென்ற இடங்களை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.

நகரின் மையப் பகுதியில் குறுகலான சாலையில் வீட்டின் வாசலில் குழந்தையை காரில் கடத்தியது அப்பகுதி மட்டும் அல்லாமல் குடியாத்தம் நகரம் முழுவதும் பெரும் சோகத்திலும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் போலி பதிவு என்பது தெரியவந்துள்ளது.