கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து மைதா மாவு மூட்டைகள் ஏற்றப்பட்டு லாரி ஒன்று சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் அருகே இருக்கும் எதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் ஓட்டி வந்தார். நேற்று கிளம்பிய லாரி நள்ளிரவில் வேலூர் மாவட்டம் பத்தலப்பள்ளி மலைப்பகுதி அருகே வந்தது.

image

குண்டத்துக்கானறு என்கிற இடத்தில் கடினமாக வளைவு ஒன்று இருக்கிறது. அங்கு பஷீர் அகமது ஓட்டி வந்த லாரி வந்தபோது எதிரே மற்றொரு வாகனம் வந்துள்ளது. இதனால் லாரியை பஷீர் லேசாக திருப்பி இருக்கிறார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று அங்கிருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் தடுப்புச் சுவர் உடைந்து 150 அடி ஆழ பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் கண்டைனர் சுக்குநூறாக நொறுங்கி, ஓட்டுநர் பஷீர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

இரவு நேரம் என்பதால் யாரும் விபத்தை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாலையில் அவ்வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த காவலர்கள் ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது தொடர்கதையாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Also Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!