10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!
ராணிப்பேட்டை சுங்கச்சாவடி அருகே கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி பகுதியில் இன்று காலையில் அதிகமான பனிமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்து காணப்பட்டது. இதனால் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற கண்டைனர் லாரி மீது கார் ஒன்று மோத, அதன் பின்னால் வந்த கார்களும் ஒன்றின் மீது ஒன்றாக அடுத்தடுத்து மோதியது.
இந்த விபத்தில் உடல்நசுங்கி ரத்தவெள்ளத்தில் ஒருவர் பலியானார். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பலியானவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விபத்து நடந்த போது அந்த வழியாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக மீட்பு பணிகளில் அவரும் ஈடுபட்டார். இன்று போகி பண்டிகை என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. மார்கழி பனியும் சேர்ந்து எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புகை நிலவுவதாலேயே விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோலாகலமான போகி..! சென்னையில் கடும் புகைமூட்டம்..!