சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 3,213 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான்,தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 6500க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் கோழிகள் மற்றும் சிக்கன் முலமாக அதிகமாக பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவ தொடங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிக்கன் மட்டுமில்லாது அசைவ உணவு வகைகளை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழிக்கறி விற்பனை மந்தமடைந்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சிக்கன் கடை நடத்தி வரும் கடைக்காரர்கள் ஒன்றிணைந்து மக்களிடையே சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பதை எடுத்துரைக்க முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று வாடிக்கையாளர்களுக்கு கடைகளில் இலவசமாக பிரியாணியும் சிக்கன் 65 வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக உமர் சாலை பகுதியில் சாமினா பந்தல் அமைக்கப்பட்டு இலவச பிரியாணி வழங்க ஏற்பாடுகள் நடந்தது.

குடியுரிமை சட்ட போராட்டங்களை ஒடுக்கிய கொரோனா..! காலவரையின்றி ஒத்திவைப்பு..!

இலவச பிரியாணி வழங்கப்படும் அறிவிப்பைக் கண்டு பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அதிகளவில் மக்கள் கூடியதால் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இலவச சிக்கன் பிரியாணியும், சிக்கன் 65 வழங்கப்பட்டது. கொரோனா பீதியையும் மறந்து 1000க்கும் மேற்பட்ட மக்கள் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்.