ஆம்பூரில் துப்புரவு தொழிலாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை - காவல் துறையினர் விசாரணை
ஆம்பூரில் துப்புரவு தொழிலாளி ஒருவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). நாயக்கனேரி ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் குப்புசாமி தனது 3 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தனியாக இருந்த குப்புசாமியின் வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது குப்புசாமி கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். குப்புசாமி நாட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீ சினிமாவில் வில்லனாக இருக்கலாம் நாங்கள் நிஜத்தில் வில்லன்; நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொலை மிரட்டல்
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் குப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் துப்புரவு தொழிலாளியான குப்புசாமியிடம் எப்படி நாட்டு துப்பாக்கி கிடைத்தது. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.