வாணியம்பாடி அருகே இரு தரப்பினரிடையே மோதல்; 3 பெண்கள் உட்பட 5 பேருக்கு மண்டை உடைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கட்டைகள் மற்றும் கற்களால் தாக்கி கொண்ட விவகாரத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மற்றும் பத்மா தம்பதியினர். இவருக்கு 16 வயதில் நாகராஜ் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 12 ஆண்டுகளாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர். பத்மா தனது 16 வயது மகன் நாகராஜ் ஆகியோர் தன் மாமியார் வீட்டின் அருகே வாழ்ந்து வருகின்றனர்.
இரு குடும்பத்தினருக்கும் இது தொடர்பாக கடந்த 12 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 16 வயது சிறுவன் நாகராஜ் தன் பாட்டி மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாயில் இருந்து குடத்தில் தண்ணீர் பிடித்து சென்று தான் ஆசையாக வளர்த்து வரும் வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தன் தந்தை வழி பாட்டி பட்டு மற்றும் பெரியப்பா, சித்தப்பா ஆகியோர் சேர்ந்து தண்ணீர் எடுத்தது குறித்து பத்மாவிடம் சண்டையிட்டுள்ளர்.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு கட்டைகள் மற்றும் கற்களால் தாக்கி கொண்டனர். இதில் சிறுவனின் தாய் பத்மா, பாட்டி முனியம்மா, தாத்தா குமரேசன், மாமா சிவகுமார் ஆகியோருக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று எதிர்தரப்பில் சண்டையிட்ட தந்தை வழி பாட்டி பட்டு என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தும் ஆட்டோக்களை ஆய்வு செய்து ஓட்டி பார்த்த எம்.எல்.ஏ. கண்ணன்
பிரச்சினை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.