திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கிறது சின்னக்கவுண்டம்பட்டி கிராமம். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. கோவில்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவையும் இருக்கிறது. இந்தநிலையில் இங்கு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும் புதிய டாஸ்மாக் கடை அங்கு திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் திரண்டு பேரணியாக வந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அவர்கள் கூறினர்.

எனினும் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் டாஸ்மாக் கடை வேறு இடத்தில் மாற்ற தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை இழுத்து மூடப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!