தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இருக்கிறது வெங்கடேசபுரம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காளியப்பன்(43). இவரது மனைவி மாலா(31). இந்த தம்பதியினருக்கு வெள்ளைச்சாமி என்கிற 9 மாத கைக்குழந்தை இருந்துள்ளது. இன்று காலையில் மனைவி மற்றும் குழந்தையுடன் தூத்துக்குடி செல்ல காளியப்பன் முடிவெடுத்தார். அதன்படி தனது இருசக்கர வாகனத்தில் காளியப்பன் மனைவியுடன் சென்றார்.

குழந்தையை மாலா தனது மடியில் வைத்து இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் அமர்ந்திருந்தார். ஓட்டப்பிடாரம் அருகே சென்றபோது காளியப்பன் சென்ற அதே சாலையின் எதிரே அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து காளியப்பன் சென்ற இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் மூவரும் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த மாலா, பேருந்து சக்கரத்தில் சிக்கினார். மாலா மற்றும் குழந்தை வெள்ளைச்சாமி மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினர். லேசான காயங்களுடன் காளியப்பன் உயிர்தப்பினார். மனைவி மற்றும் குழந்தை தன் கண்முன்னே உயிரிழந்து கிடப்பது கண்டு அவர் கதறி துடித்தார். தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

பயபக்தியுடன் பெருவுடையாரை தரிசித்த சீமான்..! தம்பிகளுடன் குடமுழுக்கில் தாறுமாறு கொண்டாட்டம்..!