தமிழர்களின் வரலாற்று அடையாளமாக விளங்குவது தஞ்சாவூர் பெருவுடையார் கோவில். இங்கு 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. அதுமுதல் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க தொடங்கின. பல்வேறு தரப்பில் இருந்தும் தமிழ் குடமுழுக்கிற்கு ஆதரவு பெருகி வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி, தமிழ்த் தேசிய பேரியக்கம் போன்ற அமைப்புகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி இருமொழிகளிலும் குடமுழுக்கு நடைபெறுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான பெரிய கோவில் கோபுர உச்சியில் இருக்கும் கலசத்திற்கு தமிழ் மற்றும் சமஸ்கிரத வேதங்கள் முழங்க நேற்று காலையில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதைக்காண்பதற்காக பெரியகோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றிருந்தன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் குடமுழுக்கை வரவேற்றதோடு மட்டுமில்லாமல் நேற்று மாலை பெரிய கோவிலுக்கு வருகை தந்து பெருவுடையாரை தரிசனம் செய்தார். பெரிய கோவிலின் கேரளாந்தகன் வாயில் வழியாக உள்ளே சென்ற சீமான், பெருவுடையார் சந்நிதியில் பத்து நிமிடங்கள் அமர்ந்து தரிசனத்தில் ஈடுபட்டார். அவருக்கு கோவில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின் அங்கிருந்து முருகன் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தார். மேலும் அதுதொடர்பான படங்களை தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார். அதில் 'தமிழ்ப்பேரரசன் அருண்மொழிச்சோழன் கட்டியெழுப்பிய தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆதிப்பாட்டன் சிவனைப் போற்றித் தொழுதபோது'..! என குறிப்பிட்டிருக்கிறார்.