உடன்குடி அருகே வேல்குமார் என்ற கூலித் தொழிலாளி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருமணமான பெண்ணுடனான கள்ளக்காதலை கண்டித்ததால் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரத்தை சேர்ந்த இளைஞர் வேல்குமார் (27). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் இரவு தனது ஊரில் இருந்து உடன்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர்.

உடன்குடி தேரியூர் கோவில் அருகே சென்றுக்கொண்டிருந்த வேல்குமாரின் இருசக்கர வாகனத்தை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிக்க முயற்சித்த போது அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதில், வேல்குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த வேல்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வேல்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டித்ததால் வேல்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. உடன்குடி தேரியூரை சேர்ந்த செல்வம் (23) என்ற இளைஞர் திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த கள்ளக்காதல் குறித்து அறிந்த வேல்குமார், புனிதராஜை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் புனிதராஜ் தனது அண்ணன் நாகராஜ் உடன் சேர்ந்து வேல்குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.