- Home
- Tamil Nadu News
- தூத்துக்குடி
- விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை! ஒரே நாளில் 15 செ.மீ.! திருச்செந்தூர் முருகன் கோவிலின் நிலைமை இதுதான்!
Tiruchendur Murugan Temple: வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்து பிரகாரத்தில் தேங்கியது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தூத்துக்குடியில் கனமழை
வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ளதாகவும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் தூத்துக்குடி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நேற்றைய தினம் இரவு முதல் இடைவிடாமல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டது.
வாகன ஒட்டிகள் அவதி
இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடியதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருச்செந்தூர் கோவிலில் வெள்ளம்
இதற்கிடையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மேற்கு கோபுர வாசல் படிக்கட்டுகள் வழியாக கோவிலுக்குள் புகுந்த மழை நீர் பிரகாரத்தில் தேங்கியுள்ளது. மேலும் கோவில் முன்புள்ள சண்முக விலாச மண்டபம் வழியாக கோவிலுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். மேலும் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் மண் அரிப்பு
மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காலையில் பெய்த மழையால் ஆங்காங்கே ஒதுங்கி நின்றனர். சிலர் மழையை பொருட்டாக நினைக்காமல் அதில் நனைந்து விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். சில பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தங்களது வேண்டுதலுக்காக கோவில் முன்பு மழையில் நனைந்தபடி முழங்கால் இட்டு வேண்டி வருகின்றனர். நேற்று இரவு முதல் பெய்த மழையால் கோவில் முன்பு கடற்கரையில் இறங்கு படிக்கட்டு பகுதியில் கடல் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.