- Home
- Tamil Nadu News
- நூற்றாண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை! இன்னும் 3 மணி நேரத்திற்கு விடாதாம்! வெதர்மேன் வார்னிங்!
நூற்றாண்டுகளுக்குப் பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை! இன்னும் 3 மணி நேரத்திற்கு விடாதாம்! வெதர்மேன் வார்னிங்!
வடகிழக்கு பருவமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்ததுடன், பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததை அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இரவு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் அதிகாலை வரை விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இதனால் எங்கு பார்த்தாலும் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் ராமநாதபுர மாவட்டத்திற்கும் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெள்ள நீர்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது விடிய விடிய பெய்த கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கோவிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும். பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறையும். அதேநேரத்தில் இந்த இரு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் இன்று நண்பகல் முதல் மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை எச்சரிக்கை
சென்னையில் இன்று காலை பிரகாசமான சூரிய ஒளியுடன் கூடிய வானிலை காணப்படுகிறது. இருப்பினும், நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு உள்ளது . குறிப்பாக இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அலுவலகம் திரும்பும்போது மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.