- Home
- Tamil Nadu News
- தூத்துக்குடி
- என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!
என் தம்பியை கொ* பண்ண உன்ன சும்மா விட்ருவேனா! சினிமா மிஞ்சிய சம்பவம்! அலறிய தூத்துக்குடி.. பதறிய பொதுமக்கள்!
தூத்துக்குடி அருகே குடும்பப் பகை காரணமாக கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவசூரியன் என்பவரை ஒரு கும்பல் காரை மோதி, ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. இந்த பழிக்குப் பழி கொலை சம்பவம் தொடர்பா 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடும்ப பகை காரணமாக கொலை
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள தாமரைமொழி பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா (48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரும், அரசப்பன் என்பவரின் மகனுமான சிவசூரியன்(34) என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவசூரியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்த சிவசூரியன்
இந்நிலையில் அக்டோபர் 8ம் தேதி சிவசூரியன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட சொல்லி உத்தரவிட்டனர். இன்று காலையில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அங்கு போலீசார் அவரை மாலையில் வந்து கையெழுத்து போடுமாறு கூறியுள்ளனர். உடனே சிவசூரியன் அங்கிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் சின்னதுரையும் உடனிருந்தார்.
ஓட ஓட விரட்டி கொலை
மெஞ்ஞானபுரம் வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது சினிமா பாணியில் காரை மோதவிட்டுள்ளனர். இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்தனர். பின்னர் காரில் வந்தவர்கள் அரிவாளுடன் இறங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தோட்டத்திற்குள் ஓடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் சிவசூரியனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவரது அண்ணன் சின்னதுரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவசூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சின்னதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிவசூரியன் பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் (52), கார்த்திக் (26), முத்துபாண்டி (32), மற்றொரு கார்த்தி (25) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஆறுமுகம் என்பவர் சிவசூரியனால் கொலை செய்யப்பட்ட கந்தையாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.