14 வயது சிறுமி நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. சிறுமியின் வாக்குமூலத்தின் பேரில், அவரது தந்தையின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வெளிநாடு தப்ப முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஹோஸ்துர்க் கிராமம். இது கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு 45 வயதான ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார். அவருக்கு 8ம் வகுப்பு படிக்கும் 14 வயதான ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த தாய் அவரை மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மாணவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் தாயிடம் கூறியதை அடுத்து மருத்துவமனை நிர்வாகிகள் உடனே ஹோஸ்துர்க் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி சொன்ன விஷயத்தை கேட்டு போலீஸ் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது இதற்கு காரணம் தனது தந்தை தான் என்று கதறியபடி கூறினார்.

இதனையடுத்து மாணவியின் தந்தை மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்ததும் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யாருக்கும் தெதரியாமல் வீட்டுக்கு வந்த மாணவியின் தந்தையை அப்பகுதியினர் மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும், பாஸ்போர்ட் எடுப்பதற்காகவே வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமியை பலாத்காரம் செய்தது அவர் தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.