மத்திய அரசு திட்டங்களை மூடி மறைக்கும் தமிழக அரசு: தூத்துக்குடியில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாடு முழுவதுக்கும் வளர்ச்சிக்கான ஊக்க சக்தி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் ஒரே பாரதம் உன்னதர பாரதம் என்ற கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் நாடு முழுவதுக்கும் வளர்ச்சிக்கான ஊக்க சக்தி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தத் திட்டங்கள் ஒரே பாரதம் உன்னதர பாரதம் என்ற கருத்தைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் பயணிகள் படகு இங்கே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் காசியிலும் இதே போன்ற ஹைட்ரஜன் படகு சேவை தொடங்கப்படும் என்று கூறினார். வ.உ.சி. துறைமுகத்தில் கடல்நீரைக் குடிநீராக்குதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் ஆகிய வசதிகள் தொடங்கிப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியின் கோரிக்கையாக இருந்தவை எல்லாம் இப்போது திட்டங்களாக செயல்பாட்டு வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
மாநில அரசை விமர்சித்துப் பேசிய பிரதமர், "நான் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் கட்சிகள் சித்தாந்தமோ, எனது தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது. நான் கூறும் அனைத்தும் முன்னேற்றத்திற்கான கோட்பாடு. தமிழ்நாட்டில் செய்தித்தாள்கள் மத்திய அரசு திட்டங்கள் பற்றி செய்தியை வெளியிடாது. தமிழ்நாடு அரசு அவர்கள் வெளியிட விடுவதில்லை. இருந்தாலும் தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியே தீருவோம்" என உறுதி அளித்துள்ளார்.
''இன்று, தமிழகத்தில் நவீன சாலை வசதிகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,300 கி.மீ. தூரத்திற்கு ரயில்வே கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், இதே காலகட்டத்தில் 2,000 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்வே பயணிகளின் வசதிக்காக நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்களில் அனைத்து நவீன வசதிகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று மோடி பேசியிருக்கிறார்.
நிலவில் போராடி தாக்குப்பிடித்த ஒடிசியஸ் லேண்டர்... கடைசி நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?
"கடல் துறையுடன், ரயில் மற்றும் சாலை தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களும் இன்று இங்கு தொடங்கப்பட்டுள்ளன. ரயில் பாதையை மின்மயமாக்குதல் மற்றும் இரட்டிப்பாக்கும் பணிகள் ஆகியவை தமிழகம் மற்றும் கேரளா இடையேயான இணைப்பை மேலும் மேம்படுத்தும். இன்று, நான் திறந்து வைத்துள்ள பெரிய திட்டங்கள், மாநிலத்தின் சாலை இணைப்பை மேம்படுத்தும், பயண நேரத்தைக் குறைக்கும், சுற்றுலா மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும்" என்று பிரதமர் கூறினார்.
மேலும், "தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறன் 35% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 38 மில்லியன் டன் சரக்கு கையாண்டு உள்ளது. ஆண்டு வளர்ச்சி 11% ஆக உள்ளது. இந்த வெற்றிகளின் பின்னனியில் பாரத அரசின் சாகர்மாலா திட்டம் பங்களிப்பு உள்ளது." என்றார்.
“நாட்டின் முக்கிய கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாக உருவாக்கலாம் என்று ஒருமுறை ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். இன்று பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 75 கலங்கரை விளக்கங்களில் உருவாக்கப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எதிர்காலத்தில் இவை நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா மையங்களாக மாறும் என்று நான் நம்புகிறேன்..." எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
"வர இருக்கும் காலத்தில் தமிழ்நாடு இந்த வளர்ச்சி பாதையில் பயணித்து மிகவும் வேகமாக உயரும். நான் உங்களுக்கு மேலும் ஒரு உத்திரவாதம் தருகிறேன். 3வது முறையாக ஆட்சி அமைக்கப் போகும் நேரத்தில் நான் உங்களுக்கு இன்னொரு உத்திரவாதத்தை அளிக்கிறேன். இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற தொடர்ந்து முயற்சி செய்வோம். இது தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அளிக்கும் உத்திரவாதம்... மோடியின் கேரண்டி..." என்று பிரதமர் மோடி பேசினார்.
விழாவில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறார். குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்புடைய 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் என பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரை விளக்கங்களைத் திறந்து வைத்துள்ளார்.
ரூ.1,477 கோடி செலவில் நிறைவடைந்துள்ள வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் பல பகுதிகளில் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் மட்டும் ரூ.17,300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மத்திய அமைச்சர்கள் சர்பானந்த சோனாவால், எல். முருகன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
செலவே இல்லாமல் மருத்துவம் படிக்கலாம்! 1 பில்லியன் டாலர் நன்கொடை பெற்ற நியூயார்க் மருத்துவக் கல்லூரி!