ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி.. பத்திரமாக மீட்பு.. எப்படி தெரியுமா?
நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அந்த ரயிலில் சுமார் 800 பயணிகள் இருந்தனர். ஆனால், கனமழை காரணமாக ரயில் தண்டவாளத்தில் மழை நீர் சூழ்ந்ததால் பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், மழை வெள்ளத்தால் தண்டவாளம் பெரும் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. முதற்கட்டமாக நேற்று 300 பயணிகள் மீட்கப்பட்டு 4 பேருந்துகள் மற்றும் 2 வேன்கள் மூலம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர்.
இதனிடையே, இந்த வழித்தடத்தில் உள்ள சாலையில் உடைப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து, ரயிலில் சிக்கியுள்ள 500 பயணிகளுக்குச் சாலை மார்க்கமாக உணவு கொடுக்க வழியில்லாத காரணத்தால், ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவுப் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில், கனமழை காரணமாக சென்னை நோக்கி வந்த ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன்படி ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பலர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். ரயிலில் இருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட பின் பயணிகள் சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.