குலசையில் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ஒட்டுமொத்தமாக தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 

PM Modi to lay foundation for the new rocket launch pad at Kulasekarapattinam today sgb

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார். "பல்லடத்திலும் மதுரையிலும் அளவற்ற அன்பைப் பெற்றேன். மகாராஷ்டிராவின் யவத்மாலுக்குச் புறப்படுவதற்கு முன் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் நடைபெற உள்ள இன்றைய நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) பல்லடம், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இரவு மதுரையில் தங்கினார். காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடிக்குப் புறப்படுகிறார். காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடி வந்தடைவார். வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்குவார்.

அங்கிருந்து காரில் அரசு விழா நடக்கும் இடத்துக்குச் செல்வார். விழாவில் நிறைவடைந்துள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார்.

குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்புடைய 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் என பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

PM Modi to lay foundation for the new rocket launch pad at Kulasekarapattinam today sgb

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரை விளக்கங்களைத் திறந்து வைக்கிளார். ரூ.1,477 கோடி செலவில் நிறைவடைந்துள்ள வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் பல பகுதிகளில் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வரும் பிரதமர் மோடி, பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் இறங்குகிறார்.

பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்தப் பொதுக்கூட்டம் காலை 11.15 மணியளவில் தொடங்குகிறது. இதனையொட்டி நெல்லை மற்றும் தூத்துக்குடியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் சுமார் ரூ.17,000 கோடி மதிப்பிலான 36 முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

அபுதாபியில் மோடி திறந்து வைத்த கோயிலுக்காக வங்கி வேலையைக் கைவிட்ட விஷால் படேல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios