கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், முகமது இஸ்மாயில் ஆகியோருக்கு சொந்தமான கோவில்பட்டி மேட்ச் கம்பெனி என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையின் அலுவலகத்தில் இன்று காலையில் திடீரென அதிகளவில் புகைமூட்டம் வந்துள்ளது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் அலுவலக அறைக்குள் சென்று பார்த்தபோது தீப்பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தனது ஒரே மகனை சினிமா பாணியில் கொன்றுவிட்டு வழக்கறிஞர் மனைவியுடன் தற்கொலை; குமரியில் சோகம்
அலுவலகத்தில் இருந்த கோப்புகள், தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் 12 முதல் 15 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டது காலை நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலை கிராம மாணவர்களுக்காக பாட்டு பாடி, டான்ஸ் ஆடி கற்பிக்கும் ஆசிரியர்; வைரலாகும் வீடியோ