ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே இருக்கிறது சத்தியவேடு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் சேகர் (50), பரந்தாமன் (48). இருவரும் பூ வியாபாரிகள். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ போன்றவற்றை மொத்தமாக வாங்கி சத்தியவேடு பகுதியில் விற்பது இவர்களது வழக்கம். நேற்று முன்தினம் இரவு மினி லாரி ஒன்றில் கோயம்பேடு வந்து பூ வாங்கிய இவர்கள் மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். வியாபாரிகள் இருவரும் லாரி மேல் அமர்ந்திருந்தனர்.

இன்று அதிகாலையில் தச்சூர் அருகே இருக்கும் பெரவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரே கார் ஒன்று வேகமாக லாரியில் உரசும்படி வந்துள்ளது. கார் மீது மோதாமல் இருப்பதற்காக லாரியை ஓட்டுநர் திருப்பி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக சென்று நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரி மேல் அமர்ந்திருந்த சேகர் மற்றும் பரந்தாமன் இருவரும் சாலையில் விழுந்து ரத்தவெள்ளத்தில் பலியாகினர்.

இந்த கோரவிபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 2 வயது குழந்தை..! உடல் வெந்து பரிதாப பலி..!