வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல்... ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைப்பு... திருவள்ளூரில் பதற்றம்..!
திருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் வாக்குப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர் அருகே பாம்பரம்பாக்கம் கிராமத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த மர்ம கும்பல் ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த பகுதியில் வாக்குப்பதிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், 2-ம் கட்டத்தேர்தல் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. அதன் பிறகு ஜனவரி 2-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிப்பட உள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கத்தில், அரசு உயர்நிலை பள்ளியில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மையத்தில் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1200 வாக்குகள் பதிவாக வேண்டிய நிலையில், நண்பகல் வரை 400 முதல் 500 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில், இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளின் பின்புறம் தேர்தல் ஆணையம் பதித்திருந்த முத்திரை, முன்புறம் ஒரு குறிப்பிட்ட சின்னத்தின் மீதும் பதிவாகியிருந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த வாக்குச்சீட்டுகளில் வாக்கினை பதிவு செய்தால், அது செல்லாததாகி விடும் என சிலர் பிரச்சனை எழுப்பியுள்ளனர். இதனையடுத்து, 12.30 மணியளவில் 50 பேர் கும்பல் திடீரென வாக்கு மையத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் 83, 84-வது வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். திடீரென 83-வது வாக்குச்சாவடியில் இருந்த ஓட்டுப்பெட்டியை வெளியில் தூக்கிக் கொண்டு ஓடினர். பின்னர் வாக்குச்சாவடி முன்பு ஓட்டுப்பெட்டியை தூக்கி எறிந்து ஓட்டுச்சீட்டுகளுக்கு தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, பாப்பரம்பாக்கத்தில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.