திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது சட்டக்கல்லூரி மாணவரின் நெஞ்சில் பந்து பலமாகத் தாக்கியதில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தாமோதரனின் மகன் லோகநாதன்(24). இவர் ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது பந்து நெஞ்சில் பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக லோகநாதனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லோகநாதனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடச்சென்ற சட்டக் கல்லூரி மாணவர் கிரிக்கெட் பந்து மார்பில் பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.