உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. தினமும் 600 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்திருக்கிறது. தனிமை சிகிச்சையில் இருந்தவர்களில் 480 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் மூன்றாமிடத்தில் நீடித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் தரும் செய்தியாக நேற்று மட்டும் 103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண நலம் பெற்று உள்ளனர். இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் தற்போது செவிலியர் உட்பட மேலும் நான்கு பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆவடி மாநகராட்சி பகுதியில் இருக்கும் அயப்பாக்கத்தைச் சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதேபோல ஜேபி எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். முன்னதாக ஆவடி பகுதியில் 13 வயது சிறுமி உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. தற்போது எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து இருப்பதால் ஆவடி பகுதி முழுவதும் தீவிர கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.