திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே இருக்கிறது வேலப்பன்சாவடி கிராமம். இங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. இந்த பணியில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த பாலா, ஜெகன், பிரதீப், கார்த்தி ஆகிய நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். கழிவு நீர் தொட்டி சுமார் 15 அடி ஆழம் கொண்டதாக இருந்தது.

image

முதலில் தொட்டியில் இருக்கும் கழிவு நீர் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றப்பட்டுள்ளது. பின் கழிவு நீர் தொட்டியின் அடியில் சிக்கியிருக்கும் கழிவுகளை அகற்றும் பணியில் நான்கு பேரும் ஈடுபட்டுள்ளனர். முதலில் பாலா கழிவு நீர் தொட்டியில் இறங்கியுள்ளார். அடியில் படிந்திருந்த சகதியை கிளறும்போது பாலாவை விஷவாயு தாக்கியுள்ளது. இதில் அவர் அங்கேயே மயங்கி இருக்கிறார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற மூவரும் உள்ளே இறங்குவதை தவிர்த்துள்ளனர்.

image

தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் கழிவு தொட்டியில் மயங்கி கிடந்த பாலாவை மீட்டு மேலே கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர்கள் பாலாவை காப்பற்ற கழிவு நீர் என்றும் பாராமல் வாயோடு வாய் வைத்து அவருக்கு சுவாசமாளித்து வந்தனர். ஆனாலும் பாலா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆபத்தான கட்டத்தில் கழிவு நீர் என்றும் பாராமல் செயல்பட்ட தீயணைப்பு வீரர்களின் செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.