திருத்தணி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சங்கீதா (21). இந்த தம்பதிக்கு 6 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் சங்கீதாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமடைந்தது.

இதையடுத்து, சங்கீதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கீதா உயிரிழந்தார். கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலால் 11 மாத குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் திருத்தணி சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 117 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சலும், 7 பேருக்கு டெங்கு அறிகுறியும் இருப்பது தெரியவந்தது. இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.