கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணியாற்றி வந்தவர் சகுந்தலா (53). இவர், செங்குன்றம் அடுத்த சோழவரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை சுகாதாரத் துறை அதிகாரிகள் முறைப்படி அடக்கம் செய்தனர்.

ஏற்கெனவே, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த சுவாமிநாதன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.