கும்மிடிப்பூண்டி அருகே யூடியூபில் வீடியோ மூலம் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன் மற்றும் உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கம்மாரப்பாளையும் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்(27). இவர் தனியார் கேஸ் ஏஜென்சியில் பணியாற்றுகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களிடையே நெருக்கும் காரணமாக அந்த மாணவி ஏற்கனவே ஒருமுறை கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

 இதன் பிறகு 2-வது முறையாகும் 9 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை மாணவி கடும் வயிற்று வலி ஏற்பட்டு பிரசவ வலியால் துடித்துள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த மாணவியை கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார் பாளையம் காப்பு காட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து ஒரு சில கருவிகள் மூலம் மாணவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

அப்போது குழந்தையின் கை வெளியே வந்ததும் பதற்றமடைந்த சவுந்தர் தொப்புள் கொடியை அறுப்பதற்கு பதிலாக வேறொரு பகுதியை அறுத்துவிட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பயந்து போன சவுந்தர் உடனடியாக மாணவியை பைக்கில் அமர வைத்து, சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு இறந்த நிலையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மாணவியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுபற்றி மருத்துவமனை தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.