திருவள்ளூர் அருகே கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர் (35). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்கலா (35). இவர்களுக்கு கைலாஷ் (9), தருண் கிருஷ்ணா (3) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தனது காரில் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது, நாராயணபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்துக்கொண்டிருந்த போது, சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி எதிரே சென்ற கண்டெய்னர் லாரி திடீரென்று காரின் மீது மோதியது. இதில் சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த புஷ்கலா, கைலாஷ், தருண் கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்நிலையில், புஷ்கலா, தருண் கிருஷ்ணா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கைலாஷ் காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், உயிரிழந்த சந்திரசேகர் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.