திருவள்ளூர் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.  

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த திருகண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்தர் (17). செங்குன்றம் எம்.ஏ. நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் செங்குன்றம் அம்பேத்கர் நகரில் இருந்து அலமாதி வரை நடந்தது. இதல் சுரேந்தர், உடன் படிக்கும் நண்பரான சோத்து பெரும்பேடு பகுதியை சேர்ந்த தனுஷ்பாலாஜி (17) உள்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், சுரேந்தரும் அவரது நண்பரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம் செங்குன்றம் அருகே வந்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்திக்கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சுரேந்தர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.