திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி குமாரி. இந்த தம்பதியினருக்கு சங்கீதா(20), ஐஸ்வர்யா(16)  என இரு மகள்கள் உள்ளனர். குமாரியின் உறவினர் முருகன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி(15) விடுமுறைக்காக அவரது வீட்டிற்கு வந்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று தனது மகள்கள் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருடன் அந்தப் பகுதியில் இருக்கும் ஏரிக்கு குமாரி குளிக்க சென்றுள்ளார். அவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த சௌமியா(16), சந்தியா(17) என இரு சிறுமிகளும் சென்று உள்ளனர்.

ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆழத்தில் சிக்கிக் கொண்ட சிறுமிகள் ஒவ்வொருவராக மூழ்க தொடங்கியுள்ளனர். இதனால் பதறிப்போன குமாரி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஏரியில் குதித்து சிறுமிகளை மீட்டனர். அவர்களில் சௌமியா, சந்தியா, பிரியதர்ஷினி ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவலர்கள் மூன்று சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வர்யா மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.